

இந்தியாவில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், 2030-ம் ஆண்டு அக்டோபர் முதல் அனைத்து புதிய கார் மாடல்களிலும் மேம்பட்ட தானியங்கி அவசரகால பிரேக்கிங் அமைப்பை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய தொழில் நுட்பம், காரின் முன்னால் உள்ள வாகனங்கள் அல்லது தடைகளைக் கண்டறிந்து, மோதல் ஏற்படும் அபாயம் இருப்பதை உணர்ந்தால் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுக்கும். ஓட்டுநர் உரிய நேரத்தில் செயல்படாவிட்டால், கார் தானாகவே பிரேக்கைப் பயன்படுத்தி விபத்தைத் தவிர்க்கவோ அல்லது அதன் பாதிப்பைக் குறைக்கவோ உதவும். 2030-ம் ஆண்டு அக்டோபர் முதல் அறிமுகப்படுத்தப்படும் புதிய கார் மாடல்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும். அதற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து உற்பத்தியில் இருக்கும் கார் மாடல்களுக்கு 2032-ம் ஆண்டு அக்டோபர் முதல் இந்த வசதி கட்டாயமாக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
கார்களில் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடுவுடன் கூடிய வரைவு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டாக்சிகளில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.தானியங்கி ஸ்டீயரிங் கட்டுப்பாடு, அவசரகால பாதை மாறுதலைத் தடுக்கும் அமைப்பு, ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் மற்றும் கவனக்குறைவைக் கண்டறிந்து எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவை டாக்சிகளுக்குக் கட்டாயமாக்கப்படலாம்.
லாரி மற்றும் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளும் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளன. தானியங்கி அவசரகால பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் பகுதிளில் இருப்பதையும் ஓட்டுநர்கள் கண்டறியும் வசதி, ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தைக் கண்டறியும் அமைப்பு மற்றும் பாதை மாறும்போது எச்சரிக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்கள், நீண்ட நேரம் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களின் சோர்வைக் குறைப்பதுடன், விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.