

மும்பை
கூட்டம், செல்பியை தவிருங்கள் என நடிகர்களுக்கு மும்பை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகன், நடிகர் டைகர் ஷெராப் (வயது 36). கடந்த அக்டோபரில், மராட்டியத்தின் மும்பை நகரில் ஜூகு பகுதியில் புஷ்பா பார்க் என்ற இடத்தில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு சென்று, விளையாடி விட்டு இரவு 7.30 மணியளவில் கருப்பு நிற பி.எம்.டபிள்யூ. காரில் வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் திடீரென்று அவருடைய கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலானது. இந்த தாக்குதலுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நடிகர் டைகர் ஷெராப்புக்கு முன் நடிகர் அமீர் கான் குறி வைக்கப்பட்ட பரபரப்பு தகவல் வெளியானது. இதுபற்றி விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடக்கத்தில், நடிகர் அமீர் கானை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
ஆனால், அமீர் கானை நெருங்குவது சவாலாக இருந்தது. மும்பையில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த கும்பல் முகாமிட்டு, அமீர் கானின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தது. இதற்காக அவருடைய வீட்டை 3 முறை நெருங்கி சென்றுள்ளது.
ஆனால், பல சமயங்களில் அவர் படப்பிடிப்புக்காக வெளியூருக்கு சென்று விடுவார். அல்லது வெளியே வராமல், வெகுநேரம் வீட்டிலேயே தங்கி விடுவார். இதனால், அவரை அணுக முடியாமல் போயுள்ளது.
இந்த தருணத்தில், டைகர் ஷெராப் எளிய இலக்காக இருந்துள்ளார். அவரை அடைவதில் பெரிய சிக்கல் இல்லை. இதனால், அவரை தங்களுடைய இலக்காக அந்த கும்பல் தேர்ந்தெடுத்து உள்ளது என விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் இந்தி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா, துஷார் கபூர் உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஐ.டி. நிறுவன ஊழியர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற பரபரப்பு சம்பவங்களை அடுத்து, மும்பை போலீசார் பாலிவுட் நடிகர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து அச்சுறுத்தல் விடப்பட்ட நிலையில், இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, கூட்டம் நிறைந்த பகுதிகளை தவிர்க்கும்படியும், அறிமுகம் இல்லாதவர்கள் கூடும் இடங்களை தவிர்க்கும்படியும் நடிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு அபாயங்கள் கொண்ட நிகழ்ச்சிகளை தவிர்க்கும்படி பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களுக்கு அறிவுறுத்தல்கள் வந்துள்ளன. கூட்டங்களில் செல்பி எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.
சமீபத்தில் குற்றவாளிகள் 3 பேரிடம் விசாரித்ததில் அவர்கள் பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன், அக்சய் குமார் மற்றும் அமீர் கான் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு உள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை அடுத்தே முன்னெச்சரிக்கையாக போலீசார் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர்.