கேரளாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் உருவக்கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்க விழிப்புணர்வு பாடத்திட்டம் மந்திரி சிவன்குட்டி தகவல்

கேரள பள்ளிகளில் 'பாடி ஷேமிங்' எனப்படும் உருவக்கேலி செயல்களுக்கு முடிவு கட்ட விழிப்புணர்வு பாடத்திட்டம் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் உருவக்கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்க விழிப்புணர்வு பாடத்திட்டம் மந்திரி சிவன்குட்டி தகவல்
Published on

திருவனந்தபுரம், 

கேரள பள்ளிகளில் 'பாடி ஷேமிங்' எனப்படும் உருவக்கேலி செயல்களுக்கு முடிவு கட்ட விழிப்புணர்வு பாடத்திட்டம் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

பல முற்போக்கான நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றது கேரள மாநிலம். தற்போது இதில் மேலும் ஒரு படி முன்னேறியுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஒருவரின் உடலமைப்பை வைத்தும், நிறம், பாலினத்தை வைத்தும் அவரை கேலி செய்வது பொது சமூகத்திலும், சினிமாக்களிலும் இயல்பான ஒன்றாக தற்போது வரை இருந்து வருகிறது.

இந்த பழக்கத்தால் பலர் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான நோய்களுக்கு மன அழுத்தம் தான் காரணம் என்று மருத்துவ உலகம் கூறி வருகிறது. இதற்கு பள்ளி, கல்லூரிகளில் இருந்தே முற்றுப்புள்ளி வைக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக கேரள பொது கல்வித்துறை மந்திரி வி.சிவன்குட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

முகநூலில் நான் என்னுடைய படத்தை பகிர்ந்திருந்த போது 'தொப்பையை' குறைக்கச்சொல்லி சிலர் கூறியிருந்தனர். உடலமைப்பை வைத்து கேலி பேசும் 'பாடி ஷேயிங்' மிகவும் கேவலமான செயல் என்று அவருக்கு நான் விளக்கம் கூறியிருந்தேன்.

எனது நண்பனின் சகோதரனுடைய மகன் இதனால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவன் மீது நிற பாகுபாடுகள் காட்டப்பட்டன. இதனால் அவன் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானதுடன், கடைசியில் பள்ளியை மாற்ற வேண்டியதாயிற்று. இதுபோன்ற கொடுமையால் பலர் உயிரை விட்ட சம்பவங்கள் கூட நடந்திருக்கின்றன.

இந்த கொடுமையான கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும்.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும், பாடத்திட்டத்தில் விழிப்புணர்வு கல்வியை பாடமாக சேர்ப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இதுதொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும்.

அதேபோல ஆசிரியர்கள் இதுபோன்ற சூழலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மனிதர்களை பொருத்தளவில் அவர்களிடம் இருக்கும் செல்வமோ, அவர்களது நிறமோ பெரிய விஷயமல்ல. மாறாக அவர்களிடத்தில் இருக்கும் நற்பண்புகளைதான் நாம் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். மந்திரியின் இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com