மராட்டிய மாநிலத்தில் பரிதாபம்; கொரோனாவில் இருந்து மீண்ட காங்கிரஸ் எம்.பி., திடீர் மரணம் - பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல்

மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், மற்றொரு வைரஸ் தொற்றால் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சதாவ் மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் பரிதாபம்; கொரோனாவில் இருந்து மீண்ட காங்கிரஸ் எம்.பி., திடீர் மரணம் - பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல்
Published on

புனே,

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர், காங்கிரஸ் இளம் தலைவர் ராஜீவ் சதாவ் எம்.பி. (வயது 46).

இவருக்கு கடந்த மாதம் 22-ந் தேதி இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புனேயில் உள்ள ஜகாங்கீர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பலனாக அவர் கொரோனாவில் இருந்து மீண்டார்.

ஆனால் அவரை மற்றொரு வைரஸ் தொற்று (சைட்டோமெகாலோ வைரஸ்) தாக்கியது. இதனால் அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து வென்டிலேட்டரில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலை குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்துடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து தொடர்பு கொண்டு விசாரிதது வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜகாங்கீர் ஆஸ்பத்திரி வெளியிட்ட அறிக்கையில், ராஜீவ் சதாவுக்கு கடந்த 9-ந் தேதி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று நெகட்டிவ் என வந்து விட்டது. ஆனாலும் அவர் பல உறுப்புகளும் செயலிழந்த நிலையில் இரண்டாம் நிலை நிமோனியாவுக்கு ஆளானார். அதில் இன்று (நேற்று) அதிகாலை 4.58 மணிக்கு மரணம் அடைந்தார் என கூறப்பட்டுள்ளது.

இவரது இறுதிச்சடங்கு இன்று (திங்கட்கிழமை), ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கலாம்னூரியில் நடக்கிறது.

இவர் மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக உருவாகி வந்தார். 2014-ம் ஆண்டு ஹிங்கோலி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களவை செயல்பாடுகளில் தீவிர ஈடுபாடு காட்டினார். இதற்காக 4 முறை தொடர்ந்து சன்சாத் ரத்னா விருது பெற்றுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட வில்லை.

ஆனால் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி. பதவி வகித்து வந்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர். காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில பொறுப்பாளராக செயல்பட்டுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டியின் நிரந்தர அழைப்பாளராகவும் விளங்கினார்.

இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், நாடாளுமன்றத்தில் எனது நண்பராக திகழ்ந்த ராஜீவ் சதாவ் மரணம் அடைந்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. அவர் அதிக ஆற்றலுடன் ஒரு தலைவராக உருவாகி வந்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என கூறி உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனது நண்பர் ராஜீவ் சதாவின் இழப்பு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கிறது. அவர் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை உள்ளடக்கி, மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட தலைவராக விளங்கினார். இது நம் அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த ராஜீவ் சதாவுக்கு பிரத்ன்யா சதாவ் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com