அயோத்தி வழக்கு விசாரணை: நேரடியாக ஒளிபரப்ப சாத்தியம் இல்லை - ஆர்.எஸ்.எஸ். கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது

அயோத்தி வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கோரிக்கை மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.
அயோத்தி வழக்கு விசாரணை: நேரடியாக ஒளிபரப்ப சாத்தியம் இல்லை - ஆர்.எஸ்.எஸ். கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது
Published on

புதுடெல்லி,

அயோத்தி வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என அளிக்கப்பட்ட மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு தற்போதைக்கு நேரடி ஒளிபரப்பு செய்வதற்கும் மற்றும் ஒலிபரப்புக்கும் தேவையான வசதிகள் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி மற்றும் ராம ஜென்மபூமி அமைந்திருந்த இடம் என கூறப்படுகிற 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் ஸ்ரீரவிசங்கர், வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. அந்த குழு சார்பில் அளித்த அறிக்கையில் சமரச பேச்சு தோல்வியில் முடிந்து விட்டதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று (6-ந்தேதி) முதல் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் கோவிந்தச்சார்யா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தினசரி அடிப்படையில் நடைபெறும் அயோத்தி நிலம் வழக்கை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் அல்லது ஒலிப்பதிவுக்கு ஏற்பாடுசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இதனை அமல்படுத்தினால் இந்த வழக்கு தொடர்பான தவறான தகவல்கள் மக்களிடையே பரவுவதை தடுக்க முடியும் என்றும் அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் கோவிந்தாச்சார்யா தரப்பில் மூத்த வக் கீல் விகாஸ் சிங் முறையிட்டார்.

இதற்கு நீதிபதிகள் அயோத்தி வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்புக்கான தொழில்நுட்ப வசதிகள் தற்போதைக்கு இல்லை என்றும் அதே நேரத்தில் இந்த வேண்டுகோளை நிர்வாக ரீதியாக பின்னர் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com