அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: முஸ்லிம்கள் வழிபாடு நடத்த தடைவிதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் சன்னி வக்பு வாரியம் வாதம்

முஸ்லிம்கள் வழிபாடு நடத்த தடைவிதிக்க முடியாது என்று அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சன்னி வக்பு வாரியம் சார்பில் வாதிடப்பட்டது.
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: முஸ்லிம்கள் வழிபாடு நடத்த தடைவிதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் சன்னி வக்பு வாரியம் வாதம்
Published on

புதுடெல்லி,

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

29-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில், சன்னி வக்பு வாரியம் தரப்பில் மூத்த வக்கீல் ராஜீவ் தவன் கூறியதாவது:-

ராமர் ஜென்மபூமியில் தற்போது உள்ள அனைத்து கட்டிடங்களையும் இடித்து விட்டு புதிதாக கோவில் கட்ட வேண்டும் என்று எதிர்தரப்பில் வாதிடப்படுகிறது.

அவர்கள் வாதத்தின்படியே ராமர் இங்கே பிறந்தார் என்று வைத்துக்கொண்டாலும், இந்த இடத்தை ஒரு தரப்பாக வழக்கில் சேர்த்துக்கொள்ள முகாந்திரம் உள்ளதா? கடந்த 1989-ம் ஆண்டுவரை இந்த இடத்தை ஒரு தரப்பாக வழக்கில் சேர்க்க யாரும் கோரவில்லை.

ராமர் மதிக்கப்படவேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஸ்ரீராமரும், அல்லாவும் மதிக்கப்படவில்லை என்றால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த மாபெரும் தேசம் பிளவுபட்டுவிடும்.

இந்த இடத்துக்கு தர்மகர்த்தா உரிமையை பொறுத்தவரை அவர்கள் வெளிப்புற வளாகத்துக்குத்தான் உரிமை கொண்டவர்கள் ஆகிறார்கள்.

ராம் சாபுத்ரா என்னும் ராமர் விக்ரகத்தை வைத்த மேடையை சுற்றித்தான் வழிபாடு நடத்தப்பட்டதே தவிர, அந்த பகுதி முழுமைக்குமான பரப்பில் வழிபாடு நடக்கவில்லை.

பிரகாரத்தை சுற்றி வழிபடுவதால் மட்டுமே அந்த இடத்தின் மீது உரிமை கோர வழிவகுக்குமா? அவர்கள் கோரிக்கையிலேயே எந்த இடத்தில் வழிபாடு நடைபெற்றது என்பது குறித்த ஒரே கருத்து இல்லை.

இந்த வழக்கில் நீதிமன்றம் திரையை விலக்கி அனைவருக்கும் காண்பிக்க வேண்டும். உட்புற பகுதியில் கடந்த 1949-ம் ஆண்டுவரை விக்ரகம் எதுவும் இருந்தது இல்லை.

அதே நேரத்தில் எந்த காலகட்டத்திலும் மசூதி, ஆட்கள் இல்லாத இடமாக இல்லை. சில நாட்களாக அது பயன்பாட்டில் இல்லை என்பது அவர்களுடைய வாதமாக இருக்கலாம்.

போப்பாண்டவர் வாடிகனில் இருக்கிறார் என்பதற்காக கிறிஸ்தவர்கள் இந்தியாவில் வழிபாடு நடத்தக் கூடாது என்று கூற எப்படி யாருக்கும் உரிமை கிடையாதோ, அதே போல வழிபாடு நடத்துவது தொடர்பாக முஸ்லிம்களுக்கும் கட்டுப்பாடு விதிக்க முடியாது. இவ்வாறு ராஜீவ் தவன் வாதிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com