அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு சரியான முடிவை எடுக்க சன்னி வக்பு வாரியம் கோரிக்கை

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் கோர்ட்டு சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று சன்னி வக்பு வாரியம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது.
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு சரியான முடிவை எடுக்க சன்னி வக்பு வாரியம் கோரிக்கை
Published on

புதுடெல்லி,

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று 19-வது நாளாக சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடைபெற்றது.

நேற்று விசாரணை தொடங்கியதும் இந்த வழக்கு விசாரணையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான கே.என்.கோவிந்தாச்சார்யா தாக்கல் செய்த மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று அவருடைய தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் முறையிட்டார்.

அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, அந்த மனுவை வருகிற 16-ந் தேதி விசாரிப்பதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சன்னி வக்பு வாரியத்தின் தரப்பில் ஆஜராகி ஏற்கனவே வாதாடி வரும் மூத்த வக்கீல் ராஜீவ் தவான் தன்னுடைய வாதத்தை தொடர்ந்தார். அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தங்களுக்கு உரியது என்று எதிர்தரப்பில் கூறமுடியுமா? ஒரு இடத்துக்கு உரிமை கோரும் அறங்காவலராக இருப்பதற்கும், பூஜைக்கு பொறுப்பேற்கும் தர்மகர்த்தாவாக இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது. ஒரு தவறு தொடர்ச்சியாக நடைபெற்று உள்ளது என்று எதிர்தரப்பில் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.

ஒரே தவறை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக செய்ய முடியாது. தவறு என்று நிரூபணம் ஆனதை சரியான முறையில் திருத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் விடுபடுதல் என்பது குற்றமாகும். எனவே நிலம் தொடர்பான விஷயத்தில் கோர்ட்டு சரியான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இவ்வாறு ராஜீவ் தவான் கூறினார்.

வழக்கு விசாரணை இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com