

அயோத்தி,
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமாக கட்டப்படும் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
அந்த விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது:-
அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அழைப்பு விடுத்ததை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்தியாவில் மட்டுமின்றி இன்று உலகம் முழுவதும் ஜெய்ஸ்ரீ ராம் என்ற கோஷம் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒட்டுமொத்த தேசத்துக்கும் இன்று உணர்ச்சிகரமான நாள். உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகள். நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வருவதோடு, விருப்பமும் நிறைவேறுகிறது. ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற கனவு நனவாகிறது.
பல ஆண்டுகளாக கூடாரத்தின் கீழ் இருக்கும் குழந்தை ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்படுகிறது. ராமர் அனைவருக்குமானவர். அவர் அனைவருக்குள்ளும் இருக்கிறார்.
ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததைப் போல் இன்று ராமஜென்ம பூமிக்கு விடுதலை கிடைத்து இருக்கிறது. பெருமகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சரயு நதிக்கரையில் வரலாற்று சிறப்புமிக்க தருணம் நிறைவேறி உள்ளது.
நவீன அடையாளம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ஏராளமான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். ராமருக்கு பழங்குடியின படகோட்டி உதவியது போல், கோவர்த்தன மலையை தூக்க கிருஷ்ணருக்கு குழந்தைகள் உதவியது போல் அனைவரின் ஒத்துழைப்புடனும் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும்.
ராமர் எல்லா இடங்களிலும் இருக்கிறார். அவர் தினமும் நமக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்து உள்ளது. ராமர் பிறந்த இடத்தில் கட்டப்படும் இந்த கோவில் இந்திய கலாசாரம், பண்பாட்டின் நவீன அடையாளமாக விளங்கும். ராமர் கோவில் நாட்டை ஒருங்கிணைப்பதோடு, இந்தியாவின் ஒற்றுமைக்கு அடையாளமாகவும் விளங்கும். மேலும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
சமூக நல்லிணக்கம்
நமது இதயங்களில் வாழும் ராமர், நமது கலாசாரத்தின் அடிப்படையாக விளங்குகிறார். ராமரைப் போல் சிறந்த ஆட்சியாளர்கள் உலகில் எவரும் இருந்தது இல்லை. சமூக நல்லிணக்கம்தான் அவரது ஆட்சியின் அடிப்படை கொள்கையாக இருந்தது. அவர் பாகுபாட்டை போதிக்கவில்லை. ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் அவரது ஆசி எப்போதும் உண்டு.
மகாத்மா காந்திக்கு ராமர் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். கடமை தவறக்கூடாது என்பதில் அவர் வழிகாட்டியாக விளங்கி இருக்கிறார். சுதந்திர போராட்டத்துக்கு மகாத்மா காந்திக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தது போல், தற்போது ராமர் கோவிலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து உள்ளனர்.
கம்ப ராமாயணம்
கம்போடியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, நேபாளம், லவோஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ராமரை வணங்குகிறார்கள். ஈரான், சீனா போன்ற நாடுகளிலும் ராமர் கதை உள்ளது. உலகிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்தோனேசியாவிலும் ராமாயணம் உள்ளது. பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் எழுதப்பட்டு இருக்கிறது. தமிழில் கம்பர் எழுதியுள்ள ராமாயணம், ராமரின் புகழை பறைசாற்றுவதாக அமைந்து உள்ளது.
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் இறைவனுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதாக அமையும். மேலும் இது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு வழிகாட்டியாகவும், தூண்டுகோலாகவும் இருக்கும் என்றும் நம்புகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
அவர் தனது பேச்சின் போது கொரோனா பரவல் பற்றியும் குறிப்பிட்டார். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் கொரோனா நம்மை விட்டு விலகியே இருக்கும் என்று அப்போது அவர் கூறினார்.
விழாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசுகையில், அயோத்தியிலும், புறநகர் பகுதிகளிலும் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கி கூறினார்.
பிரதமர் மோடியின் தலைமையில் இந்திய ஜனநாயகத்தின் மேம்பாடும், எந்த பிரச்சினை என்றாலும் இந்தியாவால் ஜனநாயக ரீதியில் சட்டப்படி அமைதியாக தீர்த்துக்கொள்ள முடியும் என்பதும் உலக நாடுகளுக்கு காட்டப்பட்டு இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானியை நினைவு கூர்ந்தார். ராமர் கோவில் கட்டுவதற்காக ஏராளமானோர் தியாகம் செய்து இருப்பதாகவும், அவர்களால் இந்த விழாவில் நேரில் கலந்து கொள்ளமுடியவில்லை என்றும், அத்வானி வீட்டில் இருந்தபடி இந்த விழாவை பார்த்துக் கொண்டு இருப்பார் என்றும் அப்போது அவர் கூறினார்.
ராமர் கோவிலை கட்டி முடிப்பதற்காக அனைவரும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று மோகன் பகவத் கேட்டுக் கொண்டார்.