மதச்சார்பின்மைக்கு சாவுமணி.. ராமர் கோவில் திறப்பு விழாவை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டனர்.
மதச்சார்பின்மைக்கு சாவுமணி.. ராமர் கோவில் திறப்பு விழாவை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
Published on

புதுடெல்லி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம், திருவனந்தபுரத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டம் இன்று நிறைவடைந்ததையடுத்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடைபெற்ற கோவில் திறப்பு விழா, மதச்சார்பின்மைக்கு சாவுமணி அடித்திருக்கிறது. அரசு, நிர்வாகம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக மதம் இருக்கவேண்டும் என்பதே மதச்சார்பின்மை. ஆனால், பிரதமர், உத்தர பிரதேச முதல்-மந்திரி, உத்தர பிரதேச கவர்னர் மற்றும் முழு அரசு இயந்திரம் சம்பந்தப்பட்ட அரசு நிகழ்ச்சியாகவே ராமர் கோவில் விழா நடத்தப்பட்டது.

எனவே, ஒட்டுமொத்த விழாவும், இந்திய ஆட்சியின் அடிப்படைக் கோட்பாட்டை நேரடியாக மீறிய செயலாகும். அதாவது அரசியலமைப்பின் கீழ் அரசுக்கு எந்த மத சார்பும் அல்லது முன்னுரிமையும் இருக்கக்கூடாது.

மேலும், இது அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களை நோக்கமாக கொண்ட நிகழ்வாகும். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டனர்.

விழா நிகழ்வுகளை பொது இடங்களில் பெரிய திரைகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்தனர். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் விழாவில் பங்கேற்கும் வ்கையில், மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிவரை மூடப்பட்டன.

ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தும் கோவிலுக்கு செல்வதற்காக மக்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது மார்ச் மாதம் வரை, அதாவது தேர்தலுக்கு முன்புவரை வரை இதனை செய்ய உள்ளனர்.

அயோத்தி தவிர அனைத்து மத வழிபாட்டு தலங்களின் நிலை, சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததைப் போலவே இருக்க வகை செய்யும் வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991, இனி கிடப்பில் போடப்படும் என்பதை ராமர் கோவில் நிகழ்வு காட்டுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com