நான் இதுவரை செய்த சிறந்த விசயங்களில் அயோத்தி பயணமும் ஒன்று: எர்ரல் மஸ்க்

இந்தியர்கள் அன்பு, இரக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர் என எர்ரல் மஸ்க் கூறியுள்ளார்.
அயோத்தி,
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவன தலைவராகவும் உள்ளார். இவருடைய தந்தை எர்ரல் மஸ்க் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெள்ளி கிழமை வரை இந்தியாவில் தங்கி விட்டு பின்னர் நாடு திரும்புகிறார்.
எர்ரல் மஸ்க்குடன் அவருடைய மகள் அலெக்சாண்ட்ரா மஸ்க்கும் வந்துள்ளார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் அமைந்துள்ள அனுமன்கார்ஹி கோவில் மற்றும் பிரசித்தி பெற்ற பிரமாண்ட கடவுள் ராமர் கோவிலுக்கும் சென்றார்.
இதுபற்றி அவர் கூறும்போது, நான் பெருமையாக உணர்ந்தேன். மனநிறைவாக இருந்தது என கூறினார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தியா ஆச்சரியம் தரும் ஓர் இடம் ஆகும். இந்தியாவுக்கு நிறைய பேர் வரவேண்டும். என்னுடைய நாட்டில் நிறைய இந்தியர்கள் உள்ளனர். அதனால், எனக்கு இந்திய கலாசாரம் தெரியும்.
இந்தியர்கள் அன்பு, இரக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர். ஆக சிறந்த மனிதர்களை இந்தியாவில் நீங்கள் காண முடியும் என்றார். இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவுகள் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன் என்றும் கூறினார்.
அவருடைய வருகை இந்தியாவின் ஆன்மீக வலிமையை பிரதிபலிக்கிறது என விஷ்ணு தாஸ்ஜி மகராஜ் சாமியார் கூறியுள்ளார். அவரை நான் வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். கடவுள் அவருக்கு தொடர்ந்து ஞானம் அளித்து வழி நடத்த வேண்டி கொள்கிறேன் என்றார்.
நான் இதுவரை செய்த சிறந்த விசயங்களில் அயோத்தி பயணமும் ஒன்று என எர்ரல் மஸ்க் கூறியுள்ளார். இதில், ஆச்சரியமளிக்கும் அனுபவம் கிடைத்தது என்றார். இந்தியாவில், கோவில்கள் அற்புதம் வாய்ந்தவை. மக்களும் கூட அதனை போன்றவர்களே என்று கூறியுள்ளார்.
அவர், தாஜ்மகாலுக்கும் செல்வது என திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், அந்த பகுதியில் அதிக வெப்பநிலை காணப்பட்டது. இதனால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.






