

புதுடெல்லி,
இந்தியாவில் ஆயுஷ் சேவைகள் துறை வேகமாக வளர்ந்து வருவதும், நாட்டின் பொருளாதாரத்தில் 2047-ம் ஆண்டுக்குள் அதன் பங்களிப்பு ரூ.30 லட்சம் கோடியை எட்டும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஓமியோபதி உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய ஆயுஷ் துறைக்கு மத்திய அரசு தனியாக அமைச்சகம் அமைத்து மேம்படுத்தி வருகிறது. இந்த ஆயுஷ் சேவைகள் துறை நாட்டில் வேகமாக வளர்ந்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது.
வளரும் நாடுகளுக்கான ஆய்வு மற்றும் தகவல் அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த துறை கடந்த 2022-23 முதல் ஆண்டுதோறும் 16.91 சதவீத வளர்ச்சி கண்டு வருவதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் சுமார் 18 லட்சம் குடும்பங்களுக்கு நேரடியாக உதவுவதாகவும் தெரிவித்து உள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் சமீபத்தில் நடந்த 11-வது ஆயுர்வேத தினத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த 2024-25-ம் ஆண்டில் மட்டும் இந்த துறையில் சுமார் ரூ.17 ஆயிரம் கோடி மருத்துவ மதிப்பீட்டு வருவாய் கிடைத்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வு நிறுவன இயக்குனர் சச்சின் குமார் சர்மா கூறுகையில், “இந்தியாவின் ஆயுஷ் சேவை பொருளாதாரம் குறித்த ஆதார அடிப்படையிலான புரிதலை உருவாக்குவதில் இந்த ஆய்வு ஒரு முக்கிய படியாக விளங்குகிறது. நாடு முழுவதும் உள்ள 6 ஆயுஷ் அமைப்புகளின் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், ஆயுஷ் துறை இந்திய பொருளாதாரத்தில் ஆண்டுக்கு 36.92 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.3.53 லட்சம் கோடி) மதிப்பில் பங்களிப்பை செய்கிறது. இது 2047-ம் ஆண்டுக்குள் 318 பில்லியன் டாலர் (சுமார் ரூ.30 லட்சம் கோடி) அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.
இந்த ஆய்வறிக்கையை பாராட்டிய மத்திய ஆயுஷ் துறை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ், ஆயுஷ் சேவை துறையின் பொருளாதார ஆற்றல் அதிகரித்து வருவதை இது காட்டுவதாக கூறினார். இதன் மூலம் ஆயுஷ் துறை வெறும் ஒரு கலாசார மரபு மட்டுமின்றி, அது இந்திய பொருளாதாரத்தின் ஒரு ஆற்றல்மிக்க மற்றும் அதிவேக வளர்ச்சி எந்திரம் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் கூறினார்.
சுகாதாரம், நல்வாழ்வு, வேலைவாய்ப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார ஈடுபாடு ஆகியவற்றில் ஆயுஷ் துறை முக்கிய பங்கு வகிப்பதுடன், ஆரோக்கியமான மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற நமது தொலைநோக்கு பார்வைக்கும் பங்களிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.