

பத்தினம்திட்டா,
கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு வேகம் காட்டியது. அண்மையில் சபரிமலை கோவில் மாதந்திர பூஜைக்காக திறக்கப்பட்டது.
பெண்களை அனுமதிக்க கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினர். கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் திறந்து இருந்த 5 நாட்களே பம்பை, நிலக்கல், சபரிமலையில் போர்க்களம் போல் காட்சியளித்தது. கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இதனிடையே சபரிமலையில் கடந்த மாதம் கோயில் நடை திறந்து இருந்தபோது, பந்தளத்தைச் சேர்ந்த சிவதாசன் (வயது 60) என்பவர் கோயிலுக்கு சென்றார். பல நாட்களாக அவர் திரும்பி வரவில்லை. சபரிமலை தீர்ப்புக்கு எதிராக பந்தளத்தில் நடந்த போராட்டத்தை சிவதாசன் ஒருங்கிணைத்து நடத்தியதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் சபரிமலை வனப்பகுதியில் பிலாபள்ளி என்ற இடத்தில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. சபரிமலையில் குறிப்பிட்ட வயது பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து பம்மை, நிலக்கல், சன்னிதானம் ஆகிய இடங்களில் போராட்டம் நடந்தபோது அதில் பங்கேற்ற சிவதாசனை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிவதாசன் அடித்துக் கொல்லப்பட்டதாக ஐயப்ப பக்தர்கள் சங்கம் மற்றும் பாஜக புகார் தெரிவித்துள்ளது. ஆனால், சிவதாசன் விபத்தில் இறந்ததாக போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
இதனை கண்டித்து இந்து ஐக்கிய வேதிகே, சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சங்க ஒருங்கிணப்பு குழு, பாஜக சார்பில் பத்தனம்திட்டாவில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பத்தனம்திட்டாவில் பந்தளம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. முழு அடைப்பு காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டமானது நடைபெற்று வருகிறது.