

லக்னோ,
நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம், ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சர்ச்சைக்குரிய தலைவர் அசம்கான், பாரதீய ஜனதா கட்சி சார்பில் களம் இறங்கிய நடிகை ஜெயப்பிரதாவை வீழ்த்தி வெற்றி கண்டவர். தேர்தல் பிரசாரத்தின்போது அவர் ஜெயப்பிரதாவை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து 3 நாட்கள் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டவர்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்களவைக்கு சென்ற பிறகு, அங்கு சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்திய பாரதீய ஜனதா பெண் எம்.பி. ரமா தேவியை விமர்சித்து, பின்னர் கடும் கண்டனத்துக்கு ஆளாகி மன்னிப்பு கேட்டார்.
இவர் ராம்பூர் எம்.எல்.ஏ.வாக இருந்த நிலையில்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து ராம்பூர் சட்டசபை தொகுதியில் கடந்த 21ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் இவரது மனைவி தஸீன் பாத்திமா சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளர் அர்ஷாத் அலி கானை 7 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்த வெற்றியின்மூலம் ராம்பூர் சட்டசபை தொகுதியை சமாஜ்வாடி கட்சி தக்க வைத்துள்ளது.