

புதுடெல்லி,
பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை ஏற்க முடியாது என்று கூறியுள்ள சுப்ரீம் கோர்ட்டு அவர்கள் மீதான வழக்கு 22ந்தேதி விசாரிக்கப்படும் என அறிவித்து உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டதாக பா.ஜனதா தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய மந்திரி உமாபாரதி, ராஜஸ்தான் மாநில கவர்னரும், உத்தரபிரதேசத்தின் அப்போதைய முதல்மந்திரியுமான கல்யாண் சிங் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அமைப்பு மேற்கண்ட தலைவர்கள் உள்பட 21 பேர் மீது ரேபரேலி சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 13 பேரை விடுவித்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் ஐகோர்ட்டும் கடந்த 2010ம் ஆண்டு உறுதி செய்தது.
எல்.கே.அத்வானி, உமாபாரதி, உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மக்பூப் அகமது (தற்போது உயிருடன் இல்லை) மற்றும் சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு 22ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் ஆர்.எப்.நாரிமன் ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று அறிவித்தது.
முன்னதாக இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் மேலோட்டமாக விசாரணை நடத்தினர். அப்போது நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 13 பேர் வெறும் தொழில்நுட்ப காரணங்களுக்காக விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று கூறினர்.
இந்த விவகாரத்தில் லக்னோ, ரேபரேலி கோர்ட்டுகளில் உள்ள 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து ஏன் விசாரிக்க முடியாது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விடுவிக்கப்பட்ட 13 பேருக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதிப்போம் என்றும் தெரிவித்தனர்.
மேலும் அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது? என்று விவரிக்குமாறு சி.பி.ஐ. அதிகாரிகளையும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.