

சிலிகுரி
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குட்டி யானையை மீனவர்கள் அதிரடியாக மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மேற்கு வங்காளத்தின் தீஸ்டா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அப்போது கஜோல்தொபா பகுதியருகே, தாய் யானையுடன், பிறந்து 3 முதல் 4 நாட்களே ஆன குட்டி யானை ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது ஆற்றின் நீரோட்டத்தில் அது அடித்து செல்லப்பட்டது. தாய் யானையால் அதனை காப்பாற்ற முடியாமல் பார்த்து, தவித்தபடி நின்றிருந்தது. இதனையறிந்ததும் பைகுந்தாபூர் வனப்பிரிவு அதிகாரிகள் மற்றும் அந்த பகுதி உள்ளூர் மீனவர்கள் உடனடியாக படகு ஒன்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.
ஏறக்குறைய ஆற்று நீரில் 5 கி.மீ. தொலைவுக்கு குட்டி யானை அடித்து செல்லப்பட்டு இருந்தது. எனினும், நீரில் தத்தளித்தபடி இருந்த குட்டி யானையை மீனவர்கள் போராடி, மீட்டு படகில் ஏற்றினர். அதனை அரவணைத்து, படகில் பாதுகாப்பாக படுக்கவும் வைத்தனர். படகை கரையை நோக்கி திருப்பினர்.
அதற்கு கால்நடைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தாய் யானையுடன் சேர்க்கப்பட்டது. அதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.