2 வயது குழந்தைக்கு பேய் பிடித்ததாக பூஜை.. ரூ.28 லட்சம் மோசடி செய்த பெண் சாமியார்

ரூ.28 லட்சம் மோசடி செய்த மராட்டியத்தை சேர்ந்த போலி பெண் சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
2 வயது குழந்தைக்கு பேய் பிடித்ததாக பூஜை.. ரூ.28 லட்சம் மோசடி செய்த பெண் சாமியார்
Published on

பாகல்கோட்டை,

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் தேரதாலா கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை.

இந்தநிலையில் லட்சுமியிடம் அவரது தோழி ஒருவர் மராட்டிய மாநிலம் கொல்லாபுராவை சேர்ந்த சீமா சாம்பவி என்ற பெண் சாமியாரை அறிமுகம் செய்து வைத்தார். 2 பேரும் செல்போனில் பேசி கொண்டனர்.

அப்போது சீமா சாம்பவி, லட்சுமியிடம் உங்கள் மகளுக்கு பேய் பிடித்துள்ளது. அதற்கு சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும். பல லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றார். இதற்கு லட்சுமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி சீமா சாம்பவி தனது வீட்டில் வைத்து குழந்தையின் பெயரில் சிறப்பு பூஜை செய்தார்.

அந்த வீடியோவை லட்சுமிக்கு அனுப்பி வைத்து பணம் வழங்கும்படி கூறினார். அதன்படி லட்சுமி அவர் கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார். மொத்தம் ரூ.28 லட்சம் வரை அனுப்பி வைத்தார். இந்தநிலையில் பல நாட்கள் ஆகியும் குழந்தைக்கு உடல் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமி, சீமா சாம்பவியை தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது செல்போன் 'சுவிட்ச்-ஆப்' என வந்தது. அப்போது தான் சீமா சாம்பவி சாமியார் என்றும், பேய் ஓட்டுவதாக கூறி ரூ.28 லட்சத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து லட்சுமி, பாகல்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி பெண் சாமியாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com