ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க அமலாக்கப்பிரிவு எதிர்ப்பு - டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கப்பிரிவு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.
ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க அமலாக்கப்பிரிவு எதிர்ப்பு - டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்
Published on

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது. ஆனால் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் நடைபெற்ற சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு ப.சிதம்பரத்தை கைது செய்ததால், நீதிமன்ற காவலில் தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவேண்டும் என்று ப.சிதம்பரம் விடுத்த கோரிக்கையை டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் நிராகரித்து விட்டது.

இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் கெயித் முன்பு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர இருக்கிறது.

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மீது பதில் அளிக்குமாறு அமலாக்கப்பிரிவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அமலாக்கப்பிரிவின் சார்பில் ஐகோர்ட்டில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், நாட்டில் உயர்ந்த பொறுப்பில் இருந்த ப.சிதம்பரம் தனது ஆதாயத்துக்காக பதவியை தவறாக பயன்படுத்தி இருக்கிறார் என்றும், எனவே குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் கூறப்பட்டு உள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் சிலர் சம்பந்தப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும், ஊழலை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், எனவே அவருக்கு ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com