ஜாமீன் மனு மீது விசாரணை: ப.சிதம்பரம் கைது சட்டவிரோதமானது - டெல்லி ஐகோர்ட்டில் வக்கீல்கள் வாதம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது சட்டவிரோதமானது என்று, டெல்லி ஐகோர்ட்டில் அவரது வக்கீல்கள் வாதிட்டனர்.
ஜாமீன் மனு மீது விசாரணை: ப.சிதம்பரம் கைது சட்டவிரோதமானது - டெல்லி ஐகோர்ட்டில் வக்கீல்கள் வாதம்
Published on

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கைதாகி நீதிமன்ற காவலில் திகார் சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 11-ந் தேதி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுரேஷ் குமார் கைத் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது நாளாக இந்த வழக்கில் வாதங்கள் தொடர்ந்தன. ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனுசிங்வி ஆகியோர் வாதாடி வருகிறார்கள்.

நேற்று விசாரணையின் போது ப.சிதம்பரம் தரப்பில் வக்கீல்கள் வாதாடுகையில் கூறியதாவது:-

கடந்த ஆகஸ்டு 20-ந் தேதியன்று டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால், விசாரணைக்காக ஆஜராக கோரி சி.பி.ஐ. தரப்பில் அவருடைய வீட்டில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்த நோட்டீசுக்கு வக்கீல் கள் மூலம் உரிய பதில் அளிக்கப்பட்டது.

அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அவர் முன்ஜாமீன் கோரிய மனு ஆகஸ்டு 23-ந் தேதி விசாரிக்கப்பட இருந்த நிலையில், ஆகஸ்டு 21-ந் தேதி ப.சிதம்பரத்தை அவருடைய வீட்டில் சி.பி.ஐ. கைது செய்தது. இந்த கைது சட்டவிரோதமானது ஆகும். முற்றிலும் உள்நோக்கம் கொண்டது.

ப.சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடுவார் என்றும், சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கலைத்து விடுவார் என்றும் கூறி சி.பி.ஐ. அவருடைய ஜாமீன் மனுவை எதிர்க்கிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விவகாரத்தில் தற்போது ஆதாரத்தை அழிக்க முடியுமா? அது சாத்தியப்படுமா? மேலும் இவர் வெளிநாடு தப்பிச் செல்ல மாட்டார். அதற்கான வாய்ப்பே இல்லை என்று நாங்கள் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம்.

இந்த வழக்கே வெளிநாட்டு பணம் இந்தியாவுக்கு முதலீடாக வந்தது தொடர்பானது என்பதையும், வெளிநாட்டுக்கு அனுப்பிய பணம் தொடர்பானது அல்ல என்பதையும் பார்க்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வக்கீல்கள் வாதம் முடிவடைந்ததும், விசாரணையை நீதிபதி நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com