

புதுடெல்லி,
பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நேற்று முக்கிய அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் நிதி ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்களிடம் பணம் சென்றடைய வேண்டும். குறிப்பாக, மத்திய அரசு துறைகளுக்கு சரக்குகளும், சேவைகளும் வழங்கிய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில், வழக்கு சம்பந்தப்படாத தொகையை கொடுப்பது அவசியம்.
அந்த நிறுவனங்களுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வழங்க வேண்டி இருந்தது. அதில், இதுவரை ரூ.40 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டு விட்டது. மீதி ரூ.20 ஆயிரம் கோடியை அடுத்த மாதம் முதலாவது வாரத்துக்குள் கொடுக்குமாறு அனைத்து அரசுத்துறைகளையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.