

புதுடெல்லி,
விமானப் பயணங்களின் போது பயணிகள் பவர் பேங்க் பயன்படுத்துவதற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட நிறுவனத்தின் ஒரு மாடல் பவர் பேங்கிற்கு முழுமையான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் கடந்த 11-ந்தேதி அன்று மேல்நிலை லக்கேஜ் அறையில் வைக்கப்பட்டிருந்த பவர் பேங்க் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் விமானம் அவசரமாக ஐதராபாத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்தே விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) இந்த புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவிற்கு உள்ளேயும், இந்தியாவிலிருந்தும் மற்றும் இந்தியாவிற்குள்ளும் இயக்கப்படும் பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களில் மொபிகின்ஸ் MK-PB-04 பவர் பேங்கைக் கொண்டு செல்ல சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தடை விதித்துள்ளது. சமீபத்தில் இந்த மாடல் சம்பந்தப்பட்ட ஒரு தீ விபத்து மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, குறிப்பிடப்பட்ட இந்த மாடலுக்கு மட்டுமே பொருந்தும்.
சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் வீர் விக்ரம் யாதவ் தலைமையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, குறிப்பிட்ட பவர் பேங்கை அடையாளம் கண்டு, பயணிகளுக்கு இந்த தடை குறித்துத் தெரிவிக்குமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்துகிறது.
விமானம் பறந்து கொண்டிருக்கும் போது மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட எந்தவொரு சாதனத்தையும் சார்ஜ் செய்ய பவர் பேங்க்குகளைப் பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப்பட்ட இதர பவர் பேங்க்குகளை பயணிகள் மேல்நிலை லக்கேஜ் அறைகளில் வைக்காமல், தங்களது கைப்பையிலேயே தங்களுடனே வைத்திருக்க வேண்டும். விமானப் பயணிகள் அனைவரும் விமானம் ஏறுவதற்கு முன்பாகவே தங்களது மொபைல் சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைக்கு விமான இருக்கைகளில் உள்ள அதிகாரப்பூர்வ சார்ஜிங் போர்ட்டுகளைப் பயன்படுத்தலாம்.