பெங்களூருவில் ஊர்வலம் நடத்த தடை; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூருவில் ஊர்வலம் நடத்த தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவில் ஊர்வலம் நடத்த தடை; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் பல்வேறு அமைப்பினர் அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் தங்களின் கோரிக்கையை முன்வைத்து பெங்களூருவில் ஊர்வலம் நடத்துவது வழக்கம். பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தின் முன் பகுதியில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலமாக சென்று அங்கு போராட்டம் நடத்துவார்கள்.

இவ்வாறு நடத்தப்படும் ஊர்வலங்களால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்து வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கி திணறும் நிலை ஏற்படுகிறது. பெங்களூருவில் எந்த போராட்டங்களும் நடைபெறாத நாளிலேயே போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகளை வாட்டி வதைக்கிறது. ஊர்வலங்கள் நடைபெறும்போது, போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மேலும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

இதுகுறித்து கர்நாடக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து பொதுநல வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றது. இதில் நீதிபதிகள், பெங்களூருவில் பொது இடங்களில் ஊர்வலமோ அல்லது போராட்டமோ நடத்த கூடாது என்று கூறி தடை விதித்துள்ளனர். சுதந்திர பூங்காவில் மட்டுமே போராட்டம் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து அரசு கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்துகிறவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com