விவசாயிகளுக்கு ஆதரவாக பந்த்: புதுச்சேரியில் நாளை பேருந்து, ஆட்டோ ஓடாது

புதுச்சேரியில் விவசாயிகள் ஆதரவு முழு அடைப்பு போராட்டத்தினை முன்னிட்டு பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் நாளை ஓடாது.
விவசாயிகளுக்கு ஆதரவாக பந்த்: புதுச்சேரியில் நாளை பேருந்து, ஆட்டோ ஓடாது
Published on

புதுச்சேரி,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகினற்னர். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்திற்கு புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தொழிற்சங்கங்கள், பல்வேறு இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. பந்த் போராட்டத்தை விளக்கி தொழிற்சங்கங்கள் சார்பில் 3 நாள் பிரசாரமும் நடைபெற்றது. கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கட்சித்தலைவர்கள் வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகளை சந்தித்து பந்த் போராட்டத்துக்கு ஆதரவு கோரியுள்ளனர்.

அந்த கட்சிகளின் மாநில நிர்வாகிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ டெம்போ ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகளை சந்தித்தும் ஆதரவு திரட்டினர்.

இதுதொடர்பாக இக்கட்சிகளின் நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, "நாளை புதுச்சேரியில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட், கடைகள் ஆகியவற்றை மூடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடாது. தமிழகத்திலும் பந்த் நடைபெறுவதால் தமிழகத்திலிருந்து புதுச்சேரி வரும் பேருந்துகளும், புதுச்சேரி வழியாக செல்லும் பஸ்களும் இயங்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.

அதேபோல் பெரும்பாலான ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனினும், புதுச்சேரியில் அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்க உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று தெரிவித்தனர். புதுச்சேரியில் அதிக அளவில் தனியார் பேருந்துகள் உள்ளன.

இந்த போராட்டம் பற்றி புதுச்சேரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் பாரதி கண்ணன் கூறும்போது, பந்த் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் ஆதரவு கேட்டுள்ளனர். இதனால் நாளை தனியார் பேருந்துகளை இயக்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com