பெங்களூரு இஸ்ரோ அலுவலகத்தில் இருந்து சந்திரயான்-2 நிலவில் இறங்குவதை பிரதமர் மோடி 60 மாணவர்களுடன் பார்க்கிறார்

சந்திரயான்-2 நிலவில் தரை இறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக பார்வையிடுகிறார். இந்நிகழ்ச்சியில் மோடியுடன் நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 60 மாணவ-மாணவிகளும் நேரில் பார்க்கிறார்கள்.
பெங்களூரு இஸ்ரோ அலுவலகத்தில் இருந்து சந்திரயான்-2 நிலவில் இறங்குவதை பிரதமர் மோடி 60 மாணவர்களுடன் பார்க்கிறார்
Published on

லக்னோ,

இஸ்ரோ நிறுவனம் சந்திரனில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 செயற்கைகோளை கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைகோள் தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவருகிறது. வருகிற 7-ந் தேதி அதிகாலை 1.55 மணிக்கு இந்த செயற்கைகோள் நிலவில் தரை இறங்குகிறது. சாதனை முயற்சியான இந்த நிகழ்வை நாடே ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியை பெங்களூரு இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக பார்க்கிறார். பிரதமர் மோடியுடன் சேர்ந்து 60 மாணவ-மாணவிகளும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்க்கிறார்கள்.

நாடு முழுவதும் இருந்து இந்த 60 மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பலகட்டமாக நடைபெற்ற அறிவியல் வினாடி-வினா போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டி கடந்த மாதம் 10-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் 10 நிமிடங்களில் 20 கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். இதில் சரியான பதில் அளித்த 60 பேர் இந்த சாதனை நிகழ்வை நேரில் பார்வையிட தேர்வு பெற்றனர்.

மற்ற மாணவ- மாணவிகளுக்கு இந்த போட்டியில் பங்கேற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேகாலயா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ராஷி வர்மா கூறும்போது, நிலவில் சந்திரயான்-2 தரை இறங்குவதை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். அதேபோல இந்த நிகழ்ச்சியின்போது வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசுவேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com