

ஆட்சி தலைமை மாற்றம்
கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது பசவராஜ் பொம்மை போலீஸ் மந்திரியாக பணியாற்றினார். அவரது நிர்வாக காலத்தில் போலீசார் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தனர். லஞ்சம் வாங்குவது ஓரளவுக்கு குறைவாக இருந்தது. போலீஸ் துறையை பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் நிர்வகிப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆட்சியின் தலைமை மாறியது. எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, போலீஸ் மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். அவரது இடத்திற்கு அதாவது புதிய போலீஸ் மந்திரியாக அரக ஞானேந்திரா நியமிக்கப்பட்டார்.
கண்ணீர் விட்டனர்
அதன் பிறகு பெங்களூருவில் போக்குவரத்து போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்திவிட்டனர். குறிப்பாக நோ-பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை அள்ளி சென்று, ரூ.1,700 வரை அபராதம் வசூலிக்கிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் கண்ணீர் விடுகின்றனர். மேலும் அபராதத் தொகையை செலுத்த முடியாவிட்டால், அதில் ஒரு சிறிய தொகையை லஞ்சமாக வாங்கி கொண்டு வாகனங்களை விட்டு வந்தனர்.
இதுகுறித்து போலீஸ் மந்திரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர், நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தி இருந்தால், அதன் உரிமையாளர் அங்கு இருந்தால் அதை விட்டுவிடுமாறும், தீவிரமாக அபராதம் விதித்து பொதுமக்களுக்கு அதிக தொல்லையை கொடுக்க வேண்டாம் என்றும் போலீசாருக்கு வாய்மொழியாக உத்தரவிட்டார். அதன்பிறகு வாகனங்களை அள்ளி செல்வது சற்று குறைந்தது.
விதிகளை மீறவில்லை
இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று ஒரு பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் பிடித்து, ஆவணங்களை காட்டுமாறு கூறினர். அவர் தன்னிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் எடுத்து காட்டினார். அனைத்தும் சரியாக இருந்ததாக போலீசாரே கூறினர். போக்குவரத்து விதிகளையும் அவர் மீறவில்லை.
ஆனாலும் லஞ்சமாக ரூ.100 வழங்கிவிட்டு செல்ல வேண்டும் என்று அந்த வாகன ஓட்டியிடம் போலீஸ்காரர் கெடுபிடியாக கூறினார். அதற்கு அவர் தன்னிடம் ரொக்கம் இல்லை என்று கூறினார். இதை ஏற்க மறுத்த அந்த போலீஸ்காரர், ரொக்கம் இல்லை என்றால் பரவாயில்லை, டிஜிட்டல் முறையில் பணத்தை தனக்கு அனுப்புமாறு வற்புறுத்தினார். வேறு வழியின்றி அந்த வாகன ஓட்டி, தன்னுடைய செல்போனை பயன்படுத்தி லஞ்சமாக 100 ரூபாயை டிஜிட்டல் முறையில் போலீஸ்காரரின் நண்பரின் கணக்கிற்கு அனுப்பினார்.
பொருளாதார நெருக்கடி
அதன் பிறகே அந்த வாகன ஓட்டியை போலீஸ்காரர் விடுவிடுத்தார். தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும், நம்மிடம் லஞ்சம் வாங்குகிறாரே என்று அந்த வாகன ஓட்டி மிகவும் நொந்து கொண்டார். அவரை போலவே வாகன ஓட்டிகள் பலரும் போக்குவரத்து போலீசாரின் தொல்லையை நினைத்து புலம்புகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் ஏற்கனவே மிகுந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள். வாழ்க்கையை நகர்த்துவதே பெரும்பாடாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் விதி மீறல் என்ற பெயரில் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வாட்டி வதைப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா ஆகியோர் உரிய கவனம் செலுத்தி, போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?.