32 கோடி பெண்களுக்கு வங்கி கணக்குகள்; 26 வார மகப்பேறு விடுப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

உலகில் அதிக வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இந்த வசதி காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
32 கோடி பெண்களுக்கு வங்கி கணக்குகள்; 26 வார மகப்பேறு விடுப்பு:  பிரதமர் மோடி பெருமிதம்
Published on

புதுடெல்லி

டெல்லியில் நாரி சக்தி வந்தன் சம்மேளன் என்ற பெயரில் இன்று மாநாடு ஒன்று நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.

அவர் பேசும்போது, பிரதமர் மோடியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களின் பெயரில் வீடுகளை பதிவு செய்யும் பணிகளை அரசு தொடங்கியது. ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 32 கோடி பெண்கள் வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

2014-ம் ஆண்டு முதல், நம்முடைய அரசு, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், பெண்களுக்கு ஆதரவு தரும் வகையிலான திட்டங்களை அறிமுகப்படுத்தி, அதனை அமல்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளது. நம்முடைய நாட்டில், ஒரு பெண் பிறந்தது முதல், கடைசி மூச்சு விடும் வரை, அவர்களுக்கு சேவையாற்றவும், அவர்களை வலுப்படுத்தவும் அர்ப்பணிப்புடன் நம்முடைய அரசு பணியாற்றி வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

பெண்களின் பணி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, அவர்களுக்கான மகப்பேறு விடுப்பை 26 வாரங்களாக அதிகரித்து இருக்கிறோம். உலகில் அதிக வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இந்த வசதி காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் ஏப்ரல் 16-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரையிலான 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படும். இதில் 2 பெரிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு உள்ளது என கூறப்படுகிறது.

இதனையொட்டி, நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த அனைத்து கட்சிகளின் அவை தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், விரிவான விவாதங்களுக்கு பின்னர், நாடு முழுவதும் உண்மையான மனவுறுதியுடன் நாரி சக்தி வந்தன் அதினீயம் அமல்படுத்தப்பட வேண்டிய தருணம் வந்துள்ளது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களை மகளிர் இடஒதுக்கீட்டுடன் நடத்த வேண்டியது கட்டாயம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

பெண்கள் மற்றும் வருங்கால தலைமுறையினக்காக பொறுப்புணர்வுடன் கட்சிகள் நடந்து கொண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

தேசத்தின் பெண் சக்தி மற்றும் 140 கோடி இந்தியர்களுக்கான பெரிய சாதனையாக இது இருக்கும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த வரலாற்று சாதனையை படைப்போம் என்று எனக்கு முழு அளவில் நம்பிக்கை உள்ளது என கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com