

கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன். இவருடைய மகள் வீணா விஜயன். இவருக்கு சொந்தமான எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு கொச்சின் தாது மணல் ஆலை நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்.) ரூ.1.72 கோடி சட்டவிரோதமாக பணம் வழங்கியதாக 2016-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரத்தில் அப்போதைய முதல்-மந்திரி பினராயி விஜயன் மீதும் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டின. மேலும் எந்தவொரு பணியையும் மேற்கொள்ளாமல் வீணாவின் நிறுவனம், சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதுதொடர்பாக 2019-ம் ஆண்டு வருமானவரித்துறை விசாரணை நடத்தியது. இதில் சி.எம்.ஆர்.எல். நிறுவனம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் விசாரணையை கையில் எடுத்தது.இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவனம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனால் விசாரணை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த கேரள ஐகோர்ட்டு, விசாரணையை நடத்த தடையில்லை என அறிவித்தது.இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிரடியாக களத்தில் இறங்கியது. முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது மருமகன் முகமது ரியாஸ் வீடுகள் உட்பட 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டது. பெங்களூருவில் உள்ள பினராயி விஜயன் மகள் வீணாவின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். மேலும் திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினரின் வாகனங்களை கட்சி தொண்டர்கள் அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.இந்த பரபரப்புக்கு இடையே பினராயி விஜயன் வீடு உட்பட 12 இடங்களில் நடைபெற்ற சோதனைக்கு பிறகு ரூ.18.36 கோடி வைப்புத்தொகை கொண்ட சுமார் 242 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக நேற்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதில் வீணா விஜயனுக்கு சொந்தமான 3 கணக்குகளும் அடங்கும். மேலும் குற்றத்தை நிரூபிக்கும் பல பதிவுகள், கணக்குகள், டிஜிட்டல் ஆதாரங்கள், முதலீடு மற்றும் வங்கி நிலையான வைப்புகள் மீட்கப்பட்டதாகவும், அந்த ஆதாரங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.இதுபோன்ற ஆதாரங்களால் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. எனவே அவர் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது