

அகமதாபாத்,
குஜராத் மாநிலம் வதோதராவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டைமண்ட் பவர் உள்கட்டமைப்பு நிறுவனம் மின்சார கேபிள்கள் மற்றும் மின் உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் ரூ. 2654 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து நிறுவனத்தை செயல்படுத்தி வரும் எஸ் என் பாட்நாகர், அவருடைய மகன்கள் அமித் மற்றும் சுமித் ஆகிய மூன்று பேரை சிபிஐ போலீசார் மற்றும் குஜராத் ஊழல் தடுப்பு பிரிவினரும் இணைந்து கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஊழல் தடுப்புபிரிவு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், வங்கி மோசடியில் ஈடுபட்ட எஸ் என் பாட்நாகர் மற்றும் அவருடைய மகன்களை கைது செய்ய சிபிஐ போலீசார் எங்களிடம் உதவியை நாடினர். இந்நிலையில் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூன்று பேரையும் நேற்றிரவு கைது செய்துள்ளோம். இதில் கைதான எஸ் என் பாட்நாகர் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 11 வங்கிகளில் பல்வேறு கடன் வசதிகளை பெற்றுள்ளார். மேலும் முறையாக கடன் தொகைகளை திருப்பி செலுத்தாமல் சுமார் ரூ. 2654 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறினார்.
மேலும் அந்நிறுவனம் போலியான கணக்கு வழக்குகளை பயன்படுத்தி வந்தது தற்போது தெரிய வந்துள்ளது. இதில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சுமார் 670.51 கோடியும், பேங்க் ஆப் பரோடா வங்கியில் 348.99 கோடியும் மற்றும் ஐசிஐசிஐ வங்கியில் 279.46 கோடியும் மோசடி செய்துள்ளதாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.