பூஜையின்போது தீப்பிடித்து எரிந்த ஆல மரம்... வைரலாகும் வீடியோ

மரத்தை சுற்றி மிக நெருக்கமாக அதிக அளவில் காட்டன் நூல் சுற்றப்பட்டிருந்ததால் அதில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
தீப்பிடித்து எரிந்த ஆல மரம்
தீப்பிடித்து எரிந்த ஆல மரம்
Published on

பாட்னா,

திருமணமான பெண்கள் தங்கள் குடும்பத்தின் நலனுக்காகவும், கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும், விரதம் இருந்து பல்வேறு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு வட மாநிலங்களில் பெண்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு விரதம் வட் சாவித்ரி விரதம். ஜேஷ்ட அமாவாசை நாளில் பெண்கள் விரதம் இருந்து ஆல மரத்தடியில் விளக்கேற்றி சாவித்ரி பூஜை செய்து வழிபடுவார்கள். அவ்வகையில், இந்த ஆண்டு ஜேஷ்ட அமாவாசை தினமான நேற்று, ஏராளமான பெண்கள் விரதம் இருந்து வழிபட்டனர்.

இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் ஆல மரத்தடியில் நடைபெற்ற பூஜையின்போது, அந்த மரம் திடீரென பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாட்னாவின் பதுகா தாலுகாவில் உள்ள மிக பழமையான அந்த ஆல மரத்தடியில், ஏராளமான பெண்கள் ஒன்றுகூடி விளக்கேற்றி பூஜை செய்தபோது, விளக்கின் நெருப்பானது, மரத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த காட்டன் நூலில் பற்றியது. மரத்தை சுற்றி மிக நெருக்கமாக அதிக அளவில் காட்டன் நூல் சுற்றப்பட்டிருந்ததால் அதில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. காய்ந்துபோன விழுதுகள் மற்றும் கிளைகளும் தீப்பற்றி எரிந்தன. இதனால் பயந்துபோன பெண்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘ஒரு நிமிடம் முன்புதான் ஆசி வேண்டி, இந்த பழமையான மரத்தை வழிபட்டார்கள்; இப்போதோ, மரம் எரிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்’ என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com