

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அலுவலகத்துக்கு டெல்லியை சேர்ந்த ஜே.கோபி கிருஷ்ணன் என்பவர் கடந்த ஜனவரி 19-ந் தேதி அனுப்பிய புகாரில், சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு மற்றும் வருவாய்த்துறையால் ப.சிதம்பரம் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் அவரும், அவருடைய மனைவி நளினி சிதம்பரமும் கடந்த ஜனவரி 11-ந் தேதி தனது முன்ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணைக்கு மூத்த வக்கீல்கள் அணியும் உடை அணிந்து கோர்ட்டுக்கு வந்தனர். இது மூத்த வக்கீல் என்ற பதவியை துஷ்பிரயோகம் செய்வதாகும். நெறியற்ற செயலாகும். எனவே, இந்த விதிமீறலுக்காக இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த புகாரை சுப்ரீம் கோர்ட்டு துணைப்பதிவாளர் கடந்த மே 31-ந் தேதி இந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தார். இதனை பரிசீலனை செய்த இந்திய பார் கவுன்சிலின் சிறப்புக்குழு நேற்று ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் மற்றும் புகார்தாரர் ஜே.கோபிகிருஷ்ணன் ஆகியோர் அடுத்த மாதம் (செப்டம்பர்) 28-ந் தேதி காலை 11.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.