

பாராமதி
மராட்டியத்தின் பாராமதி, ரகுரி ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 6 மணியளவில் நிறைவடையும். இதில், மராட்டிய துணை முதல்-மந்திரியாக உள்ள சுனேத்ரா பவார் கதேவாடி தொகுதியில் உள்ள வாக்கு மையத்தில் இன்று காலை தன்னுடைய வாக்கை செலுத்தினார்.
இதன்பின் அவர் பேசும்போது, வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்றும் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் வாக்களித்த பின் வேண்டுகோளாக கேட்டு கொண்டார். அவருடைய கணவர் அஜித் பவார் விமான விபத்தில் பலியான நிலையில், பாராமதி தொகுதிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் பிரசார பணிகளில் ஈடுபட்டு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பாராமதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுனேத்ரா பவார் பெரிய அளவில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். முதல்-மந்திரி பட்னாவிஸ், சுனில் தத்காரே, பிரபுல் பட்டேல், சகன் புஜ்பால், உதய் சமந்த் மற்றும் ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சுப்ரியா சுலேவும் கலந்து கொண்டார்.
இதேபோன்று, அகல்யாநகர் மாவட்டத்தில், ரகுரி தொகுதிக்கான இடைத்தேர்தலுக்காக நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-மந்திரி பட்னாவிஸ், மந்திரி ராதாகிருஷ்ண விகே பாட்டீல், பங்கஜ முண்டே மற்றும் வஞ்சித் பகுஜன் அகதி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் பலர் பங்கேற்றனர்.