ஹனிமூன் செல்லும் முன்... காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்; மகிழ்ச்சி தெரிவித்த கணவர்

புதுப்பெண் குஷ்பு 10 நாட்கள் பெற்றோருடைய வீட்டில் இருந்தபோது திடீரென காணாமல் போய் விட்டார்.
படாவன்,
சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி என்பவர் திருமணம் முடிந்து, தேன் நிலவுக்காக சிரபுஞ்சிக்கு சென்றபோது, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், அவருடைய மனைவி சோனம், காதலருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் உத்தர பிரதேசத்தின் படாவன் மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மவுசம்பூர் இஸ்லாம் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவருக்கும் பிசாவ்லி கொத்வாலி பகுதியை சேர்ந்த குஷ்பு என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே 17-ந்தேதி திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
அடுத்த நாள் மனைவியை சுனில் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றார். 9 நாட்கள் கணவருடன் குஷ்பு ஒன்றாக இருந்துள்ளார். இதன்பின்னர், மணமகளை அவருடைய வீட்டார் அழைத்து சென்று விட்டனர். சுனில், ஹனிமூன் செல்வதற்காக தயாராகும் வேலையில் இறங்கியுள்ளார்.
ஆனால், புதுப்பெண் குஷ்பு 10 நாட்கள் பெற்றோருடைய வீட்டில் இருந்தபோது திடீரென காணாமல் போய் விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர். ஆனால், அவரோ காதலரை தேடி சென்று விட்டார். மனைவி காணாமல் போன விவரம் கடந்த 10-ந்தேதி சுனிலுக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர் காதலருடன் சென்று விட்டார் என சுனில் தெரிந்து கொண்டார். மறுநாள் பிசாவ்லி காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து, போலீசார் ஒருபுறம் மணமகளை தேடி வந்தனர். இந்நிலையில், பெண் ஒருவர் புர்கா அணிந்தபடி பிசாவ்லி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் வேறு யாருமல்ல.
காதலரை தேடி, கணவரை தவிக்க விட்டு விட்டு சென்ற குஷ்பு என போலீசாருக்கு தெரிய வந்தது. இதுபற்றி அறிந்ததும், காவல் நிலையத்தில் ஒன்று கூடிய இரு வீட்டாரும் சமரச முடிவுக்கு வந்துள்ளனர். தங்கம், வெள்ளி உள்ளிட்ட அவரவர் பொருட்களை திருப்பி கொடுத்து விட்டனர்.
குஷ்பு, காதலருடனேயே வாழ விரும்புகிறேன் என உறுதியாக தெரிவித்து உள்ளார். காதலருடன் அவர் சென்றும் விட்டார். சுனிலும் அவரை மகிழ்ச்சியாக அனுப்பி வைத்து விட்டார். இதுபற்றி சுனில் கூறும்போது, நல்லவேளை ரகுவன்ஷி நிலை போன்று எதுவும் நேரவில்லை என மகிழ்ச்சியை வெளியிட்டார்.






