

புதுடெல்லி,
சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவும், அதன் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக கூறினர். நாட்டின் உயரிய போலீஸ் அமைப்பின் மிகப்பெரிய அதிகாரிகள் வெளிப்படையாக மோதிக் கொண்டது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மத்திய அரசு அலோக் வர்மாவையும், ராகேஷ் அஸ்தானாவையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இந்த நிலையில் அலோக் வர்மா மீது ராகேஷ் அஸ்தானா கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து 2 வாரத்துக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என்று அண்மையில் ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த 2 வார கெடு நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா நேற்று 2-வது நாளாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் ஆஜரானார். அப்போது அதன் தலைவர் வி.கே.சவுத்ரி மற்றும் ஆணையர்கள் டி.எம்.பாசின், சரத்குமார் ஆகியோரை அவர் சந்தித்தார்.
இந்த குழுவின் முன்பாக தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்ததுடன் சுமார் ஒரு மணி நேரம் தகுந்த புள்ளி விவர தகவல்களுடன் விளக்கமும் அளித்தார்.
ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் ஆஜரான அலோக் வர்மாவை அந்த அலுவலகத்தின் வெளியே காத்திருந்த செய்தியாளர்கள் பேட்டி காண முயன்றனர். ஆனால் அவர்களிடம் அவர் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.
நேற்று முன்தினமும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் முன்பாக சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பதும், இதேபோல் அன்றைய தினம் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் ஆஜராகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.