டெல்லி பேராசிரியை கொலையில் மேற்கு வங்காள தம்பதி கைது

கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்காக 1,400 கி.மீ பயணம் செய்து திட்டமிட்டு கொலை செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
டெல்லி பேராசிரியை கொலையில் மேற்கு வங்காள தம்பதி கைது
Published on

புதுடெல்லி,

கிழக்கு டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ல சத்யம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தவர் தேபோஸ் மிதா பால் (வயது 42) இவர் டெல்லியில் உள்ள சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது கணவர் பெங்களூரில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று தேபோஸ் மிதா பாலுக்கு அவரது சகோதரி தேவரதி பால் போன் செய்தார். நாள் முழுவதும் போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. இதனையடுத்து சந்தேகம் அடைந்த தேவரதி பால் தனது சகோதிரியின் வீட்டுக்கு நேரில் வந்து பார்த்தார்.

படுகொலை

அப்போது அவரது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.இதனையடுத்து அவர் பூட்டை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்து பார்த்தார். அப்போது அங்கு சகோதரி தேபோஸ் மிதா பால் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகொலை செய்யப்பட்ட பேராசிரியை தேபோஸ்மிதா பால் தலையில் ஆழமான காயம் காணப்பட்டது.

அவரது கை மணிக்கட்டில் உள்ல நரம்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. யாரோ அவரை தலையில் பலமாக தாக்கி, கை மணிக்கட்டு நரம்பை அறுத்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

தடயவியல் நிபுணர்களும் ஆதாரங்களை சேகரித்தனர். அவரது வீட்டில் இருந்த நகைகளும், பணமும் அப்படியே இருந்தது. எனவே கொள்ளை சம்பவத்துக்காக கொலை நடைபெறவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள் . கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் கொலையாளிகளை தொடர்ந்து தேடி வந்தனர்.அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் பேராசிரியை தேபோஸ்மிதா பால் கொலை செய்யபப்ட்ட சம்பவம் தொடர்பாக கணவன் -மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலைக்கு சொத்து தகராறு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க தம்பதி

கொலை சம்பவம் நடந்தபோது அந்த தம்பதியுடன் ஒரு குழந்தையும் இருந்தது. பேராசிரியையின் வீட்டிற்குள் சென்று அவரை கொலை செய்வதற்கு முன்பு அந்த குழந்தையை அவர்கள் வீட்டின் வெளியே விட்டு சென்றனர். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்காக 1,400 கி.மீ பயணம் செய்து திட்டமிட்டு கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மேற்கு வங்க தம்பதி தெரிவித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொலைக்கான காரணம் குறித்து கணவன் மனைவியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com