ராம நவமிக்கு பொது விடுமுறை அறிவித்த மேற்கு வங்காள அரசு: பா.ஜ.க. கிண்டல்

மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, முதல் முறையாக ராம நவமிக்கு பொதுவிடுமுறை அறிவித்திருப்பதை பா.ஜ.க கிண்டலுடன் வரவேற்றுள்ளது.
ராம நவமிக்கு பொது விடுமுறை அறிவித்த மேற்கு வங்காள அரசு: பா.ஜ.க. கிண்டல்
Published on

கொல்கத்தா,

ராம நவமி பண்டிகை அடுத்த மாதம் 17-ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்காள அரசு ராம நவமி அன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மேற்கு வங்காள ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராம நவமியான ஏப்ரல் 17-ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

துர்கா பூஜை, காளி பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகியவை மேற்கு வங்காளத்தின் முக்கிய பண்டிகைகள். கடந்த சில ஆண்டுகளாக ராம நவமி ஊர்வலங்களின் போது மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

ராம நவமியை பொது விடுமுறை நாளாகக் குறிக்கும் மேற்கு வங்காள அரசின் அறிவிப்பைப் பகிர்ந்து கொண்ட பா.ஜ.க.வின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, 'ஜெய் ஸ்ரீ ராம் ' என்று ஒவ்வொரு முறையும் உச்சரிக்கும் போது கோபத்தால் நீல நிறமாக மாறும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் ராம நவமியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளார். அவர் தனது இந்து விரோதப் பிம்பத்தை மீட்டெடுக்கவே இதைச் செய்துள்ளார் என்று மாளவியா கேலி செய்துள்ளார்.

பா.ஜ.க தலைவரும், மேற்கு வங்காள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி கூறுகையில், "மாநிலத்தில் மாறி வரும் சூழ்நிலை காரணமாக மம்தா இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தில் வேகமாக மாறிவரும் சூழ்நிலையால் ராமபக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பதை அவர் இப்போது உணர்ந்திருக்கிறார். அதனால்தான் அவர் ராம நவமியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளார்,'' என்றார்.

கடந்த ஆண்டு ராம நவமியின் போது மோதல் ஏற்பட்டபோது, மாநிலத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்க வெளியாட்கள் முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com