மே.வங்காளத்தில் மருத்துவர்களின் போராட்டம் நீடிப்பு -டெல்லி, மும்பையிலும் மருத்துவ சேவைகள் பாதிப்பு

மே.வங்கத்தில் மருத்துவர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடித்து வருகிறது. இதனால் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மே.வங்காளத்தில் மருத்துவர்களின் போராட்டம் நீடிப்பு -டெல்லி, மும்பையிலும் மருத்துவ சேவைகள் பாதிப்பு
Published on

கொல்கத்தா,

கொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்களன்று நோயாளியின் உறவினர் ஒருவர் பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கினார். இதையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி திங்கள் முதல் அரசு பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சி மருத்துவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால், அம்மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் நிலையில் கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நேரில் சென்றார். அப்போது தங்களுக்கு நீதி வேண்டும் எனக் கூறி மருத்துவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவர் கோபமடைந்தார்.

மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது. பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சதி செய்கின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மம்தா பானர்ஜி நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

ஆனால், மம்தா பானர்ஜி எச்சரிக்கையை பொருட்படுத்தாத பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை நீட்டித்து வருகின்றனர். 4-வது நாளாக நீடிக்கும் போராட்டத்தால், சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதி மருத்துவர்கள் மேற்கு வங்காள மருத்துவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளனர். இதனால், டெல்லி , மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com