மேற்குவங்காள தேர்தல் : பிளஸ் 2 மாணவர்களுக்கு மொபைல் போன் -டேப்லெட் வாங்க ரூ.10 ஆயிரம்- மம்தா பானர்ஜி அதிரடி

மேற்கு வங்காள மாநிலத்தில் 9.5 லட்சம் பிளஸ் 2 மாணவர்களுக்கு மொபைல் போன் மற்றும் டேப்லெட் வாங்க அரசு சார்பில் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
படம்: PTI
படம்: PTI
Published on

கொல்கத்தா

மேற்குவங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்றுவரும் 9.5 லட்சம் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மொபைல் போன் மற்றும் டேப்லெட் வழங்கப்படும் என அறிவித்தார்.

கடந்த டிசம்பர் 3ம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டாலும், குறுகிய கால கட்டத்தில் மொபைல்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் பட்ஜெட் விலைக்குள் அடங்கும் 9.5 லட்சம் சாதனங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.கொரோனா சூழல் காரணமாக பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளையே நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, மாணவர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.10 ஆயிரம் வழங்க மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்து உள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மம்தா கூறியதாவது:

9.5 லட்சம் பிளஸ் 2 மாணவர்களுக்கு மொபைல் போன் மற்றும் டேப்லெட் வாங்க அரசு சார்பில் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். அரசு சார்பில் டெண்டர் விட்டதில் 1.5 லட்சம் சாதனங்கள் மட்டுமே கிடைக்கும் என அறிந்தோம். மத்திய அரசும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சாதனங்களை வாங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அடுத்த மூன்று வார காலத்திற்குள் இந்த தொகை மாணவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com