பெங்களூரு ஏர்போர்ட்டில் கொரிய சுற்றுலா பெண் பயணியிடம் அத்துமீறிய விமான நிலைய ஊழியர்: அதிர்ச்சி சம்பவம்

பாதுகாப்பு அதிகாரியின் செயலால் அதிர்ச்சி அடைந்த அந்த கொரிய பெண் விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.
பெங்களூரு,
பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கொரிய சுற்றுலாப்பயணியிடம், சோதனை என்ற பெயரில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:தென்கொரியாவை சேர்ந்தவர் கிம் சுங் க்யுங். இவர் கடந்த 19 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையம் வந்தார். விமானத்தில் ஏறுவதற்கான இமிகிரேஷன் பணிகள் முடிந்த பிறகு, தனது உடமைகளை சோதனை செய்ய செக்கிங் பாயிண்ட் சென்றார்.
அப்போது அங்கு இருந்த விமான நிலைய ஊழியர் அபான் அகமது என்பவர், உங்கள் உடமைகளை சோதனை செய்யும் போது எச்சரிக்கை அலாரம் ஒலிப்பதால் உங்களை சோதிக்க வேண்டியுள்ளது என்று கூறி, கழிவறை அருகே உள்ள அறைக்கு அழைத்து சென்றார். அப்போது அந்த பெண்ணின் மார்பு மற்றும் அந்தரங்க பகுதிகளை தொட்டு அத்துமீறியதோடு, கட்டிப்பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கொரிய பெண் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே “மன்னித்துவிடுங்கள்” என்று கூறி அந்த அபான் அகமது அங்கிருந்து சென்றார்.
விமான நிலைய ஊழியரின் செயலால் அதிர்ச்சி அடைந்த அந்த கொரிய பெண் விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு, கொரிய பெண் கூறியதாவது: “இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்கு நான் இந்தியாவை குறை கூற மாட்டேன். இது ஒரு தனிநபரின் செயல். இந்தியா மிகவும் பாதுகாப்பான நாடு.” என்று தெரிவித்துள்ளார்.






