பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு: சந்தேக நபர் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

பெங்களூருவில் உள்ள பிரபல ஓட்டலில் நேற்று குண்டுகள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு: சந்தேக நபர் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. பெங்களூருவில் பிரபலமான ஓட்டல் என்பதால் எப்போதும் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இதனிடையே, இந்த ஓட்டலில் நேற்று மதியம் 1 மணியளவில் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். உணவக ஊழியர்களும் வாடிக்கையாளர்களுக்கு உணவு வினியோகம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.

இந்த குண்டுவெடிப்பில் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் உணவகத்தில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 10 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் ஓட்டலில் சேதம் ஏற்பட்டது.

இந்த குண்டுவெடிப்பு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தேசிய பாதுகாப்புப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்களும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேக நபர் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சந்தேகிக்கப்படும் நபர் தனது கையில் பையுடன் முகக்கவசம், கண்ணாடி, தொப்பி அணிந்தவாறு நேற்று மதியம் 12.30 மணியளவில் ஓட்டலுக்கு வந்துள்ளார். அந்த நபர் ஓட்டலில் இட்லி வாங்கிக்கொண்டு அங்கு உள்ள இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். பின்னர், ஓட்டலை ஒட்டியுள்ள மரம் அருகே அமைந்துள்ள கை கழுவும் இடத்தில், தான் கொண்டுவந்த பையை வைத்துவிட்டு வெளியேறியுள்ளார்.

அந்த நபர் வெளியேறிய ஒருமணி நேரத்தில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்துள்ளன. கை கழுவும் இடத்தில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள், புகைப்படங்களை கொண்டு சந்தேக நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பையை வைத்து சென்ற சந்தேக நபருடன் மற்றொரு நபர் ஓட்டலில் பேசுவது போன்ற சி.சி.டி.வி. காட்சிகள் கிடைத்த நிலையில் ஓட்டலில் சந்தேக நபரிடம் பேசியவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஓட்டலில் பையை வைத்து சென்ற நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com