பெங்களூரு: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

பெங்களூருவில் தொடர் கனமழைக்கு 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழைக்கு மத்தியிலும் பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாபுசாப் பாளையாவில் புதியதாக 6 மாடி கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வந்தன.

இந்த கட்டிடப்பணியில் வடமாநில தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அவர்கள் கட்டிடத்தின் அருகே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களாக பெங்களூருவில் கனமழை பெய்து வந்ததால் தொழிலாளிகள் அனைவரும் கட்டிடத்தின் உள்ளே நின்று வேலை பார்த்து வந்தனர்.

அதன்படி நேற்று 20 பேர் கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 3 மணி முதல் மாலை 4 மணி வரை பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தது. அந்த சமயத்தில் மாலை 4 மணியளவில் அந்த 6 மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் 5 மாடி முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்திற்குள் நின்று வேலை பார்த்து வந்த கூலி தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கினர். வெளியே நின்று வேலை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பி ஓடி உயிர் தப்பினர்.

அந்த கட்டிடத்திற்குள் 20 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்ததும், அவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியதும் தெரியவந்தது. இதுபற்றி உயிர் தப்பிய தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ஹெண்ணூர் போலீசார், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கு மீட்பு பணிகள் தொடங்கியது.

முதற்கட்டமாக 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகின. அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உள்ளே சிக்கியிருந்த 13 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். 4 தொழிலாளிகள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில்பெங்களூருவில் அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 16 மணி நேரத்திற்கு மேலாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டிட இடிபாடுகளை அகற்ற முடியாத அளவுக்கு உள்ளது. இதனால் கட்டிட இடிபாடுகளை அகற்ற பொக்லைன், கியாஸ் கட்டர் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சுற்றுசுவர் அமைக்க அதிகளவு குழி தோண்டிய நிலையில், கனமழையால் அதில் நீர் தேங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

பெங்களூருவில் அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் முனிராஜ் , அவரது மகன் மோகன் மீது ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com