

பெங்களூரு,
கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேஷ் பிரசாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம் பார்வையாளர்களுக்கு ஏற்ற ஸ்டேடியம் அல்ல. ஏனெனில் 360 டிகிரியில் போட்டியை காண முடியாது. 32 ஆயிரம் இருக்கைகளை கொண்ட இந்த ஸ்டேடியத்தில் டக் அவுட் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் 22 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வினியோகிக்க முடியும். அதில் பாஸ்களை கழித்து பார்த்தால், 20 ஆயிரம் பேர் மட்டுமே கட்டணம் செலுத்தி போட்டியை பார்க்க முடியும்.
அதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் இருக்கைகளின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு மாநில அரசின் உதவி தேவைப்படுகிறது. எனது தலைமையிலான குழுவினர் நிர்வாகத்துக்கு வந்த பிறகு இங்கு போட்டிகளை நடத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டோம்.
அதன் விளைவாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றன. வருகிற அக்டோபரில் சர்வதேச ஒருநாள் போட்டிகளும், டிசம்பரில் டி20 போட்டிகளும் இந்த ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கின்றன. ஆனேக்கல்லில் நிறுவப்படும் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கும். எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த விஷயத்தில் அரசு எங்களை அரவணைத்து செயல்படுமா என்பது எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.