பெங்களூரு: கல் குவாரியில் பாறை சரிந்து விபத்து - 8 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு

கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கல் குவாரியில் பாறை சரிந்து விபத்து - 8 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகாவில் உள்ள மதபட்டணா பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் இன்று காலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 8 ஊழியர்கள் பாறை கற்களுக்கு அடியில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த 8 தொழிலாளர்களும் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“பெங்களூரு தெற்கு தாலுக்காவில் உள்ள மதபட்டணாவில் கல் குவாரி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி வேதனையை ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடையவும், இந்த துயரத்தைத் தாங்கிக்கொள்ள அவர்களது குடும்பத்தினருக்கு வலிமை கிடைக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நான் பிரார்த்திக்கிறேன்.

கல் குவாரி பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குவாரி உரிமையாளர்களின் கடமையாகும். விதிமுறைகளை மீறும் குவாரிகள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com