பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்

ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்
Published on

பெங்களூரு,

பெங்களூரு,ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் ஆனதால், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த மாதம் (ஜூன்) 4-ஆம் தேதி வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன்பு திரண்டனர்.இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், ஆர்.சி.பி. அணியின் நிர்வாகி நிகில் சோசலே உள்பட 4 பேர் கைதாகினர்.

தற்போது அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளனர். இதற்கிடையே இந்த கூட்ட நெரிசல் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்றது. இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் உள்ள சில முக்கிய அம்சங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:

கோப்பையை வென்ற மறுநாளே சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்த ஆர்.சி.பி. நிர்வாகம், விழாவை நடத்த நியமிக்கப்பட்ட டி.என்.ஏ. நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் ஏற்பாடு செய்தன. பாராட்டு விழாவுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. விரிவான போலீஸ் பாதுகாப்பு இல்லை. மைதானத்திற்கு எவ்வளவு ரசிகர்கள் வருவர் என்பதை கணிக்க உளவுத்துறை, பெங்களூரு அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தவறிவிட்டது.

மைதானத்திற்குள் வெறும் 79 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.வெளியே கூட்டத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு போலீசார் இல்லை. சரியான ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. மாலை 3:25 மணிக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் நிகழ்ச்சி நடத்த முடியாது என்று அவர்களுக்கு தெரிந்தும், நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.

பெங்களூரு அணி நிர்வாகம் தன் 'எக்ஸ்' பக்கத்தில், வீரர்கள் திறந்த பஸ்ஸில் பேரணியாக அழைத்து செல்லப்படுவர் என்று பதிவிட்டதே, கூட்டம் அதிகரிக்க காரணம். பெங்களூரு அணி நிர்வாகம் - கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் போலீஸ் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. கூட்ட நெரிசலில் 11 பேர் பலியானதற்கு பெங்களூரு அணி நிர்வாகம், டி.என்.ஏ. நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்தான் நேரடி காரணம்" என்று கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com