பெங்களூரு கூட்ட நெரிசல்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த ஆர்.சி.பி. நிர்வாகம்


பெங்களூரு கூட்ட நெரிசல்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த ஆர்.சி.பி. நிர்வாகம்
x

ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரு,

2025 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி முதல் முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதனை கொண்டாடும் விதமாக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்.சி.பி.) அணி சார்பில் வெற்றிக் கொண்டாட்ட பேரணி நடந்தது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன்பு திரண்டனர்.

இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.சி.பி. அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பெங்களூரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், காவல்துறை உயர் அதிகாரிகள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. பின்னர் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, ஐ.பி.எல். வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story