பெங்களூரு நெரிசல்: கர்நாடக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை

பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 18 ஆண்டுகளில் முதன்முறையாக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதால் அந்த அணியின் ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
ஐபிஎல் கோப்பையை வென்று நேற்று பெங்களூரு திரும்பிய ஆர்சிபி அணியினரை விமான நிலையத்துக்குச் சென்று கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் வரவேற்றார். பின்னர், ஆர்சிபி வீரர்கள் கர்நாடகாவின் தலைமைச் செயலகமான விதான சவுதாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து பெங்களூரு அணி வீரர்கள், சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டனர். அப்போது, பெங்களூரு அணி வீரர்களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனால், ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவத்திற்கு கர்நாடகா அரசே காரணம் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடகா ஐகோர்ட்டு தானாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு ஐகோர்ட்டு விசாரிக்கிறது.






