

பெங்களூரு,
பெங்களூருவில் ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த பெண்ணின் உடல், வீட்டுக்குள்ளேயே எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகன்டே பகுதியை சேர்ந்தவர் தக்ஷாயிணி (வயது 60). இவருடைய கணவர் உமேஷ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். இதில் இவர்களது மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தக்ஷாயிணி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
மகளுக்கு திருமணம் ஆகிவிட்டதால், தக்ஷாயிணி அந்த வீட்டில் யாருடைய துணையும் இன்றி முற்றிலும் தனியாக வசித்து வந்தார். அக்கம் பக்கத்தினரிடமும் அவர் அதிகமாக பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தக்ஷாயிணியின் வீடு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்தது. அத்துடன் அந்த வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக பாகலகன்டே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள அறையில் தக்ஷாயிணி எலும்புக்கூடாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தக்ஷாயிணி சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பே வீட்டிற்குள் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. உடல் அழுகி, முழுமையாக எலும்புக்கூடாக மாறும் வரை இந்த விபரம் யாருக்குமே தெரியாமல் இருந்துள்ளது.
அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், தக்ஷாயிணிக்கு மகள் மற்றும் மருமகன் இருந்தும், அவர்கள் கடந்த ஒரு வருடமாக அவரை நேரில் வந்து பார்க்கவோ, அல்லது போன் மூலம் தொடர்பு கொண்டு பேசவோ இல்லை என்று கூறப்படுகிறது.
பெற்ற மகளே தாயை கவனிக்காமல் விட்டதால், ஓராண்டாகப் பெண் ஒருவரின் உடல் வீட்டுக்குள்ளேயே எலும்புக்கூடாக கிடந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.