எஸ்சிஎஸ்டி சட்டத் தீர்ப்புக்கு எதிரான ‘பாரத் பந்த்’ போர்களமானது, 7 பேர் உயிரிழப்பு, மத்திய படைகள் விரைவு!

எஸ்சிஎஸ்டி சட்டத் தீர்ப்புக்கு எதிரான போராட்டம் வன்முறை களமாகி உள்ளது. வடமாநிலங்களில் வன்முறை சம்பவங்களில் 7 பேர் பலியாகி உள்ளனர். #BharatBandh
எஸ்சிஎஸ்டி சட்டத் தீர்ப்புக்கு எதிரான ‘பாரத் பந்த்’ போர்களமானது, 7 பேர் உயிரிழப்பு, மத்திய படைகள் விரைவு!
Published on

புதுடெல்லி,

1989-ம் ஆண்டு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மூலம் அந்தப் பிரிவினருக்கு பல உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புதிய குற்றங்கள் தொடர்பான ஷரத்துகளையும் சேர்த்து, மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்தத் திருத்தப்பட்ட சட்டம், கடந்த 2016 ஜனவரி 26 முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த சட்டத்தின்கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகளை பதிவு செய்யவும், கைது நடவடிக்கையை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கு தலித் அமைப்புகளும், பழங்குடியினர் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை தொடங்கின.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இவ்விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து உள்ளது.

இந்தியா முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்து உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் போராட்டத்தின் போது பெரும் வன்முறை வெடித்ததில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலத்தில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர், மொரெனா மற்றும் பிந்த் மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டு உள்ளது. ஒடிசா, பஞ்சாப், உத்தரபிரதேசம் என வடமாநிலங்களியில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

பல்வேறு பகுதிகளில் போராட்டம் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டி வன்முறையில் முடிந்து உள்ளது. அநேக பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆக்ரா, மீரட் என பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசம் மாநிலத்திலும் பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 40 போலீசார், பொதுமக்களில் 50 பேர் காயம் அடைந்து உள்ளனர். 448 பேரை காவலில் எடுத்து உள்ளோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்திலும் வன்முறை வெடித்து உள்ளது. மேதல் சம்பவங்களில் அம்மாநிலத்தில் 700க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பா.ஜனதா மீது மாயாவதி பாய்ச்சல்

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பேசுகையில், தலித் மற்றும் ஆதிவாசி பிரிவினர்களுக்கு எதிராக பா.ஜனதா அரசு பலத்தை தவறாக பயன்படுத்துகிறது. போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறேன். சிலர் போராட்டத்தில் வன்முறையை பரப்புகிறார்கள் என எனக்கு தகவல் கிடைத்து உள்ளது, அதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். போராட்டத்தில் எங்களுடைய கட்சிக்கு தொடர்பு கிடையாது. போராட்டத்தின் போது வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

காங்கிரஸ்

போராட்டத்தின் போது வன்முறை வெடித்து ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருள் சேதத்திற்கு மத்திய அரே முழுவதும் பொறுப்பாகும் என காங்கிரஸ் சாடிஉள்ளது.

இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு முன்னதாக மத்திய அரசு சரியான வாதத்தை முன்வைக்க வில்லை என குலாம் நபி ஆசாத் கூறிஉள்ளார்.

மத்திய படைகள் விரைவு

மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு மத்திய அரசு 800 வன்முறை எதிர்ப்பு படை வீரர்களை அனுப்பி உள்ளது.

உள்துறை அமைச்சகம் கண்காணிப்பு

போராட்டம் காரணமாக ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து கண்காணிப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பாரத் பந்த் காரணமாக எழுந்த சூழ்நிலையை மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவாக கண்காணித்து வருகிறது. மாநில அரசுக்களுடன் தொடர்ந்து அரசு தொடர்பில் உள்ளது. மாநிலங்களுக்கு மத்தியப்படைகள் தேவை என்ற நிலையில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதுவரையில் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிடம் இருந்து மத்தியப்படைகளை அனுப்புமாறு கோரிக்கை எழுந்து உள்ளது. சிஆர்பிஎப், ஆர்ஏஎப் படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்குமாறு மாநில அரசுகளிடம் கேட்டு உள்ளோம். மக்களின் உயிரை காக்கவும், சொத்துக்களை காக்கவும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டு உள்ளோம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com