கோதுமை வயல் வழியாக லக்கேஜ்களுடன் நடந்து சென்ற விமான சிப்பந்திகள் : காரணம் என்ன?

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை கடந்த 8-ம் தேதி நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கோதுமை வயல் வழியாக லக்கேஜ்களுடன் நடந்து சென்ற விமான சிப்பந்திகள் : காரணம் என்ன?
Published on

சண்டிகர்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து 16-வது நாளாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த 8-ம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் பாரத் பந்த் நடைபெற்றது.

இந்த போராட்டத்தால் பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. ஆட்டோக்கள், டாக்சிகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பல்வேறு தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில், பாரத் பந்த் போராட்டத்தால் போக்குவரத்து சேவை பாதிப்பு காரணமாக தனியார் விமான நிறுவன ஊழியர்கள் கோதுமை வயல் வழியாக நடந்து சென்று விமான நிலையத்தை அடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தை சேர்ந்த விமானி மற்றும் விமான பணிப்பெண்கள் கடந்த 8-ம் தேதி வழக்கமான தங்கள் விமான பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். சண்டிகர் நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த விமான ஊழியர்கள் 8-ம் தேதி காலை ஹோட்டலில் இருந்து புறப்பட்டு மொகாலி நகரில் உள்ள விமான நிலையத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக ஒரு வாடகை காரில் விமான ஊழியர்கள் அனைவரும் சண்டிகரில் இருந்து மொகாலி நோக்கி புறப்பட்டனர். ஆனால், மொகாலி விமான நிலையம் செல்லும் சாலையில் விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்ததால் விமான ஊழியர்கள் பயணித்த கார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது. விவசாயிகள் போராட்டத்தால் கார் விமான நிலையத்தை அடைவதில் சிக்கல் ஏற்பட்டது.

விமானத்தை இயக்க நேரம் ஆகிக்கொண்டிருப்பதை உணர்ந்த விமான ஊழியர்கள் அனைவரும் அருகே இருந்த கோதுமை வயல் பாதை வழியாக நடைபயணமாக சென்று மொகாலி விமானநிலையத்தை அடைய திட்டமிட்டனர். இதையடுத்து, விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு கோதுமை வயல் வழியாக 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மொகாலி விமான நிலையத்தை அடைந்தனர்.

ஊழியர்கள் அனைவரும் கோதுமை வயல்வழியாக நடந்து செல்வதை ஊழியர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். விவசாயிகள் போராட்டத்தால் விமான ஊழியர்கள் கோதுமை வயல்வழியாக நடந்து விமானநிலையத்தை அடைந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com