மத்திய பிரதேசத்தில், ராகுல் காந்தியின் பாதயாத்திரை

ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஒருநாள் ஓய்வுக்குப்பின் மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று மீண்டும் தொடங்கியது. யாத்திரையில் பங்கேற்கும் தொண்டர்களின் வசதிக்காக நடமாடும் நூலகம் திறக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தில், ராகுல் காந்தியின் பாதயாத்திரை
Published on

பாதயாத்திரைக்கு ஓய்வு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் ஈடுபட்டு உள்ளார்.

இந்த பாதயாத்திரை கடந்த மாதம் 23-ந்தேதி முதல் மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறது. பா.ஜனதா ஆளும் இந்த மாநிலத்தில் மால்வா-நிமார் பிராந்தியத்தின் 380 கி.மீ. தொலைவை 12 நாட்களில் கடக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த பாதயாத்திரைக்கு முன்தினம் ஓய்வு விடப்பட்டு இருந்தது. இதனால் யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் உஜ்ஜைனில் ஓய்வெடுத்தனர்.

பின்னர் இன்று மீண்டும் இந்த யாத்திரை தொடங்கியது.

திக்விஜய் சிங், ஹரிஷ் ராவத்

அதன்படி அதிகாலை சுமார் 6 மணியளவில் உஜ்ஜைனின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கார்டி மருத்துவக்கல்லூரியில் இருந்து யாத்திரை தொடங்கியது. மத்திய பிரதேசத்தில் யாத்திரையின் இறுதி மாவட்டமான அகர் மால்வாவை நோக்கி சென்றது. இதில் ராகுல் காந்தியுடன் உத்தரகாண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத், மாநிலங்களவை உறுப்பினர் திக்விஜய் சிங், முன்னாள் எம்.பி. பிரேம்சந்த் குத்து, மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபா ஓசா, நடிகை ஸ்வாரா பாஸ்கர் என ஏராளமான பிரபலங்களும் நடந்து சன்றனர். அத்துடன் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நடமாடும் நூலகம்

இந்த நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் இன்று நடமாடும் நூலகம் திறக்கப்பட்டது. அந்தவகையில், அரசியல், வரலாறு, தலைவர்களின் வாழ்க்கை வரலாறு என பல்வேறு துறை சார்ந்த சுமார் 1000 புத்தகங்கள் வைக்கப்பட்ட லாரி ஒன்றும் யாத்ரீகர்களுடன் செல்கிறது.

இந்த நூலகத்தை ராகுல் காந்தி இன்று முறைப்படி திறந்து வைத்தார். பாதயாத்திரை சல்லும் காங்கிரஸ் தொண்டர்கள் ஓய்வு நரத்தில் படிப்பதற்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக கட்சியின் தசிய சட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் அவனி பன்சால் தெரிவித்தார்.

யாத்திரையில் பங்கேற்றுள்ள 17 பேர் இணைந்து இந்த நூலகத்தை ஏற்படுத்தியதாக கூறிய அவர், பாதயாத்திரை நிறைவடைந்த பிறகும், இதைப்போன்ற 500 நூலகங்கள் நாடு முழுவதும் நிறுவப்படும் என்றும் கூறினார்.

மத்திய அரசு மீது குற்றச்சாடடு

இதற்கிடையே கச்சா எண்ணெய் விலை தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'சர்வதேச சந்தையில் கடந்த 6 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 25 சதவீதத்துக்கு மேல் குறைந்து இருக்கிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு ரூ.10-க்கு மேல் குறைக்க முடியும். ஆனால் அரசு ஒரு ரூபாய் கூட குறைக்கவில்லை' என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தை தவறாக நிர்வகிப்பதாக பிரதமர் மோடியை குற்றம் சாட்டியுள்ள ராகுல் காந்தி, நாட்டு மக்கள் விலைவாசி உயர்வால் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com