எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 4 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

மறைந்த வேளாண் விஞ்ஞானி தமிழகத்தை சேர்ந்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக்கொண்டார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 4 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
Published on

புதுடெல்லி,

சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களை மறக்காமல் கவுரவிப்பது இந்தியாவின் பண்பு. அந்தவகையில், மத்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், 'பாரத ரத்னா' விருதுதான் நாட்டிலேயே மிக உயரிய விருதாகும். முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஐந்து தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

பீகார் மாநில முதல்-மந்திரியாக இருந்த சமூக சீர்திருத்தவாதியான மறைந்த கர்பூரி தாக்கூர், பா.ஜனதா தலைவராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றிய 96 வயது எல்.கே.அத்வானி, மறைந்த பிரதமர் சவுத்ரி சரண்சிங், மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உயரிய விருதான பாரத ரத்னா விருதினை எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 4 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வழங்கினார். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகன் பி.வி.பிரபாகர் ராவ் பெற்றுக் கொண்டார். அதேபோல மறைந்த முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்சிங்கிற்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது பேரன் ஜெயந்த் சிங் பெற்றுக்கொண்டார்.

மறைந்த வேளாண் விஞ்ஞானி தமிழகத்தை சேர்ந்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட விருதை அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக்கொண்டார். மறைந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாக்கூருக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது மகன் ராம்நாத் தாக்கூர் பெற்றுக் கொண்டார். பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு வீடு தேடி பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com