

மும்பை,
மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டியில் கனமழை காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து ஸ்பைடர் மேன் உடையணிந்த வாலிபர் ஒருவர் போக்குவரத்தை சரி செய்து உதவினார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம், பிவண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் முழங்கால் அளவிற்கு மேல் வெள்ளநீர் தேங்கியது. இதையடுத்து சாலைகளில் உள்ள பள்ளங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஷதாப் மோமின் என்ற இளைஞர், 'ஸ்பைடர் மேன்' உடையில் களத்தில் இறங்கினார். இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்தார். வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை தள்ளி உதவி செய்தார்.
தண்ணீரைக் கண்டு பயந்த சிறிய குழந்தைகளைத் தனது தோளில் சுமந்தபடி பாதுகாப்பாக சாலையைக் கடக்க உதவினார். போக்குவரத்து நெரிசலை சரிசெய்தது மட்டுமல்லாமல் வயதானவர்களின் கையைப் பிடித்து சாலையை கடக்க வைத்தார். இதைப் பார்த்த பலரும் அவரை ”பிவண்டி ஸ்பைடர் மேன்” என்று அன்புடன் அழைத்தனர்.
அங்கிருந்த சிலர் இவரின் சேவையை தங்களின் செல்போனில் பதிவு செய்தனர். நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகச் செயல்பட்ட இந்த 'ஸ்பைடர் மேன்' குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் மற்றும் பொதுமக்கள் ஷதாப்பை பாராட்டி வருகின்றனர்.